விஜய்க்கு அவநம்பிக்கை மட்டுமே உள்ளது: சபரீசன்

விஜய்க்கு அவநம்பிக்கை மட்டுமே உள்ளது: சபரீசன்

படம்: தினமலர்

03 Apr 2026 - 4:24 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் முதன்மை எதிர்க்கட்சி என்ற ஒன்று கிடையாது என முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக களமிறங்குவதால் திமுக வெற்றி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றார்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடுகிறார் கார்த்திக் மோகன். அங்குள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அங்கு வந்தார் சபரீசன். அவரது மனைவி செந்தாமரையும் உடன் வந்திருந்தார்.

கூட்டத்தில் பேசிய சபரீசன், திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தனது நெருங்கிய நண்பர் என்றும் தாமே தேர்தலில் போட்டியிடுவதாகக் கருதி திமுகவினர் களப்பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது விஜய்யின் அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார்.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இம்முறையும் திமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்றார்.

“திமுக ஆட்சி தொடரும். தமிழகத்தில் முக்கியமான எதிர்க்கட்சி என்ற ஒன்று தற்போது இல்லை.

“ஒரு தலைவர் என்பவர் நம்பிக்கையுடன் தனது தொண்டர்களை வழிநடத்த வேண்டும். ஆனால், விஜய்யிடம் அவநம்பிக்கை மட்டுமே உள்ளது.

“அரசியல் களத்தில் புது வரவான தவெகவால் திமுகவுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை,” என்றார் சபரீசன்.

குறிப்புச் சொற்கள்
திமுகவேட்பாளர்பிரசாரம்தவெகவிஜய்