ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி மலைப் பாதையிலுள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பிரதோஷ வழிபாட்டிற்கு மலையேற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி வழிபாட்டிற்காக அக்டோபர் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நான்கு நாள்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை (அக்டோ பர் 22) இரவு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாகச் சதுரகிரி மலைப் பாதையிலுள்ள தணிப்பாறை ஓடை, மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை ஓடை ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சதுரகிரி மலையேறத் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கித் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
