சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம்: புது இடங்கள் தேர்வு

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம்: புது இடங்கள் தேர்வு

2 mins read
211ae58e-c1d9-4699-936d-ac55ed99b39b
அண்மையில் அமைந்த தவெக அரசு, விவசாயிகள், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் திட்டத்தை அதிகாரபூர்வமாகக் கைவிட்டது. அதற்கு மாற்றாகவே தற்போது செய்யூர், மணலூர் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. - கோப்புப் படம்: மாலை மலர்
Google News Preferred Icon

சென்னை: சென்னையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையத்தை அமைப்பதற்கு புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னைக்கு அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர், திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள மணலூர் ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி அருகில் முதற்கட்ட ஆய்வுப் பணிகள் தொடங்கி உள்ளதாகவும் தெரிகிறது.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து, மேற்குறிப்பிட்ட இடங்களில் ஏதேனும் ஒன்றில் விமான நிலையம் அமையும் எனக் கூறப்படுகிறது.

இவ்விரு இடங்களின் தொழில்நுட்ப, செயல்பாட்டுச் சாத்தியக்கூறுகள் குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழக அரசு அதிகாரபூர்வ கடிதம் அனுப்பியுள்ளது.

முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கி, 5,746 ஏக்கர் பரப்பளவில் ரூ. 29,143 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக, 3.5 மடங்கு நில இழப்பீடு தருவதாக அரசு உறுதியளித்தும் விளைநிலங்கள், நீர்நிலைகள் பாதிப்படையும் எனக் கூறி ஏகனாபுரம் உட்பட 13 கிராம மக்கள் கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அண்மையில் அமைந்த தவெக அரசு, விவசாயிகள், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் திட்டத்தை அதிகாரபூர்வமாகக் கைவிட்டது. அதற்கு மாற்றாகவே தற்போது செய்யூர், மணலூர் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்ப அறிக்கை அளிக்கப்பட்ட பின்னரே இறுதி இடம் குறித்து அதிகாரபூர்வ முடிவு எட்டப்படும். இருப்பினும், புதிய இடத்தை இறுதி செய்வதிலும் நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல், இடப்பெயர்வு ஆகிய நடவடிக்கைகளிலும் தமிழக அரசு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்