சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையனும் அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரும் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்றனர். அந்த விமானம் கோயம்புத்தூரில் தரையிறங்குவதற்குப் பதில் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதில் திமுக நிர்வாகிகள் சிலரும் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
விமானம் பிற்பகல் 1.40 மணிக்கு கோயம்புத்தூர் வரும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்தனர்.
இந்த நிலையில் கோயம்புத்தூரில் தரையிறங்க வேண்டிய இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக பெங்களூரு விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
இந்த விமானத்தில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோரும் பயணம் செய்தனர். கோயம்புத்தூரில் வானிலை சரியானவுடன் பெங்களூருவில் இருந்து இண்டிகோ விமானம் கோயம்புத்தூர் வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையனை வரவேற்பதற்கு உற்சாகமாக வந்த தவெக தொண்டர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர்.

