மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தனித் தீர்மானம்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தனித் தீர்மானம்

2 mins read
6a43cc04-615c-4a37-8358-8100803fe091
கர்நாடக அரசின் தன்னிச்சையான செயல்பாட்டுக்கு தமிழகச் சட்டமன்றம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்வதாக முதல்வர் விஜய் கூறினார். - கோப்புப் படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதை ஒருபோதும் ஏற்க இயலாது எனத் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தமிழகச் சட்டமன்றத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

அதை ஒருமித்த கருத்தோடு அனைவரும் ஆதரிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

மேகதாதுவில் அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்தும் அணைகட்ட அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் மேற்குறிப்பிட்ட தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது பேசிய முதல்வர் விஜய், கர்நாடக மாநில அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்றும் மேகதாது அணை கட்ட முயற்சி செய்வதை ஏற்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கர்நாடக அரசின் தன்னிச்சையான செயல்பாட்டுக்குத் தமிழகச் சட்டமன்றம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்வதாகவும் அவர் கூறினார்.

“கர்நாடக மாநில அரசுக்கு அணைத் திட்டம் தொடர்பாக தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சார்ந்த எந்தவித அனுமதியும் அளிக்கக் கூடாது.

“காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறைப் படுகை எனக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் படுகையின் மொத்த நீரையும் படுகை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டன.

“எனவே, காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரைப் பயன்படுத்தவோ இயலாது,” என முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரிப் பிரச்சினை தமிழக, கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினை என்றும் அந்தத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்