சேலம்: திமுக ஆட்சி குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதுபோல் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, நடப்பு திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாசாரம் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இதைத் தவிர இந்த ஆட்சி குறித்து என்ன குறை கூற முடியும்? என்று கேள்வி எழுப்பிய அவர், தொடர்ந்து பேசும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், அதுகுறித்து தனது மூத்த சகோதரரைப் போன்ற முதல்வர் ஸ்டாலிலினிடம் தம்மால் உரிமையாகக் கேட்க முடியும் என்று குறிப்பிட்டார் பிரேமலதா.
“அனைத்து வகையிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி, பெண்களுக்கான உரிமையையும் பாதுகாப்பையும் முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் வழங்குவார். எனவே, பெண்கள் இனி நிம்மதியாக இருக்கலாம்,” என்று பிரேமலதா மேலும் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு ஆதரவாகப் பேசியதுபோல் இருந்தாலும், ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததுபோல் சில விவரங்களைப் பிரேமலதா குறிப்பிட்டது திமுக வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

