சென்னை: தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் நீடிக்கும் இழுபறியால் மாநிலத்தில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக), ஆட்சியமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அழைக்காததைக் கண்டித்து அக்கட்சியின் தொண்டர்களும் காங்கிரஸ் கட்சியினரும் வெள்ளிக்கிழமை (மே 8) மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திரு ஜோசப் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை வென்றபோதிலும், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன. காங்கிரசின் ஐந்து இடங்களுடன் தவெக கூட்டணிக்குத் தற்போது 113 இடங்களே உள்ளது.
ஆட்சி அமைக்க ஆளுநரை விஜய் இருமுறை சந்தித்து விட்டார். ஆனால், 118 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் தெரிவித்துவிட்டார்.
ஆனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று விஜய் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற திமுக, அதிமுக இடையே ரகசியக் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
அத்தகைய சூழல் ஏற்பட்டால், தவெகவின் 107 சட்டமன்ற உறுப்பினர்களும் (விஜய் நீங்கலாக) ஒட்டுமொத்தமாக பதவி விலகிவிடுவார்கள் என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.
மற்றொருபுறம், விசிகவும் இடதுசாரிக் கட்சிகளான சிபிஐ. சிபிஎம் ஆகியவையும் தங்களது ஆதரவு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
விசிக தலைவர் திருமாவளவன் வெள்ளிக்கிழமை விஜய்யைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கும் வகையில் இந்த முட்டுக்கட்டையை உடைக்க இடதுசாரிக் கட்சிகள் விரைவில் இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டங்களைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

