சென்னை: தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 200 அரசு அலுவலகக் கட்டடங்களின் கூரைகளில், மொத்தம் 200 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதற்குத் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் திட்டமிட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவித்து, மின்கட்டணச் செலவைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன் தொடர்பில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கை மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் இதுகுறித்த அதிகாரத்துவ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேவை நிறுவன (ரெஸ்கோ) மாதிரியின்கீழ் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னைய திமுக ஆட்சியின்போதும் இத்தகையதொரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்றும் ஆனால் செயல்முறைக்கு வரவில்லை என்றும் பசுமை எரிசக்திக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களின் மேற்கூரைகளில் 20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. ஆனால், எந்த ஒரு தனியார் நிறுவனமும் அதனைச் செயல்படுத்த முன்வரவில்லை.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த ஒப்புந்தப்புள்ளி நடைமுறை ரத்துசெய்யப்பட்டது.
இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரைவுபடுத்தும்படி இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளதை அடுத்து, அத்திட்டம் புதிய வடிவத்துடன் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
ஆயினும், கூரைப்பகுதியில் போதிய இடம் கிடைப்பதே இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள முக்கிய சவாலாக நீடிக்கிறது என்று மற்றோர் உயரதிகாரி கூறினார்.
ஆகையால், மேற்கூரையில் போதிய இடவசதி உள்ள மாவட்ட ஆட்சியகங்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

