சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியதும் அமைச்சரவையிலும் திமுகவிலும் மாற்றங்கள் இடம்பெறலாம் எனத் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள திரு ஸ்டாலின், வரும் 12ஆம் தேதி நாடு திரும்புகிறார்.
இதனிடையே, அமெரிக்காவில் இருந்தபடி காணொளி வாயிலாக திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் அந்தக் கலந்துரையாடலில் பங்குபெற்றனர்.
அப்போது, திமுக தொடங்கப்பட்டதன் 75ஆம் ஆண்டு நிறைவுவிழா, முப்பெரும் விழா ஏற்பாடுகள், ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டப் பணிகள் ஆகியவை குறித்து ஆலோசித்ததாகத் திரு ஸ்டாலின் தமது எக்ஸ் ஊடகப் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமைச்சரவை மாற்றம் குறித்து ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டுவிட்டது என்றும் முதல்வர் வெளிநாட்டிலிருந்து வந்ததும் சிறுசிறு மாற்றங்களுடன் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கட்சி வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அதுபோல், திமுகவிலும் அமைப்புரீதியாக பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்தி, முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளது. முதல்வர் அதற்கு ஒப்புதல் அளித்து, விரைவில் அதிரடி மாற்றங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
திமுகவின் பவளவிழாவை முன்னிட்டு, திமுக கொடிக் கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் கட்சிக்காக உழைத்த மூத்த முன்னோடிகளால் கட்சியின் இருவண்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், “வீதிகள்தோறும் பறக்கும் நம் இருவண்ணக் கொடி நம் வீடுகள்தோறும் பறந்திட வேண்டும்,” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை
இதற்கிடையே, திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
“அதிமுக ஆட்சிக்காலத்தில் முதலீடுகளை ஈர்த்தது வெளிப்படையாகத் தெரிந்தது. இப்போது இந்த ஆட்சியில் கூறப்படும் தொழில் முதலீடுகள் குறித்த தொகை எதுவும் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை,” என்று அவர் சொன்னார்.

