கன்னியாகுமரி: அனைத்துலகச் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘பெருந்தலைவர் காமராஜர்’ அதிநவீனப் படகின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை (நவம்பர் 12) நடைபெற்றது.
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, அவற்றை இணைக்கும் கண்ணாடிக் கூண்டுப் பாலம் ஆகியவற்றைக் காண அன்றாடம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கண்ணாடிப் பாலம் திறக்கப்பட்ட பிறகு பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதால், போதிய படகு வசதியின்றிப் படகுத் துறையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த திமுக ஆட்சியில் புதிய அதிநவீனப் படகு வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 150 இருக்கைகள், நவீன வசதிகளுடன் கோவாவில் கட்டப்பட்ட படகு கன்னியாகுமரிக்குக் கொண்டு வரப்பட்டது.
விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை வழித்தடத்தில் ‘பெருந்தலைவர் காமராஜர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படகின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள இப்படகின் மூலம், சுற்றுலாப் பயணிகளின் காத்திருப்பு நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
