சென்னை: மாநகராட்சி பெண் கவுன்சிலர் ஒருவர் தனது வார்டுக்கு உட்பட்ட மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கான பயிற்சியை அளித்து வருகிறார். அவரை எதிர்க்கட்சியினரும் பாராட்டுகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் 44ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சர்ப ஜயாதாஸ். சனிக்கிழமைதோறும் நடத்தும் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
அரசியலுக்கு வரும் முன்பு தாம் ஆசிரியையாகப் பணியாற்றியதாகக் குறிப்பிடும் சர்ப ஐயாதாஸ், மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தாம் அளிக்கும் பயிற்சி பெரிதும் உதவும் என்கிறார்.
“ஒருமுறை மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்குள்ள மாணவர்கள் திறமைசாலிகளாக இருந்தபோதும் ஆங்கிலத்தில் பேச தயங்குவதைக் கவனித்தேன். அதன் பிறகே பள்ளி நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்று ஆங்கிலத்தில் பேசும் வகுப்புகளை நடத்தத் தொடங்கினேன்,” என்கிறார் சர்ப ஐயாதாஸ்.
வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் இவரிடம் தொடர்ந்து 15 நிமிடங்களுக்்கு ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். பல மாணவர்கள் தயக்கத்தைக் கைவிட்டு ஆங்கிலத்தில் பேசுவதாகக் குறிப்பிடுகிறார்.
கவுன்சிலர் சர்ப ஐயாதாஸ் புனே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது அங்கு சொந்த நிறுவனத்தை நடத்தி வந்த கணவர் நரேந்திரனைச் சந்தித்துள்ளார். இருவரும் பின்னர் காதலித்து மணம் புரிந்துள்ளனர்.
“என் கணவர் திமுகவில் உள்ளார். நான் போட்டியிட்ட மாநகராட்சி வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சித் தேர்தலில் எனக்கு வாய்ப்பளித்தார்.
“எனது பூர்வீகம் மேற்குவங்கம். வங்காள மொழி பேசும் எனக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் அறவே தெரியாது. இப்போது தாய்மொழி தவிர இந்தி, சமசுகிருதம், மராத்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் தமிழும் தெரியும். சிறார்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிப்பது அரசியல் பணியைவிட அதிக மனநிறைவைத் தருகிறது,” என்கிறார் சர்ப ஐயாதாஸ்.

