சென்னை: சென்னையிலும் சென்னையைச் சுற்றிலும் உள்ள மாவட்டங்களிலும் மிச்சாங் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சு அனுப்பிய குழு ஒன்று, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மழை, வெள்ளச் சேதங்களை ஆய்வுசெய்தது.
மத்திய ஆய்வுக்குழு வடசென்னை, தென்சென்னை, வேளச்சேரி கல்வி நகர், ஏஜிஎஸ் காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வுகளை மேற்கொண்ட மத்தியக் குழுவினர், “கனமழை, வெள்ளப் பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது. வெள்ளப் பாதிப்புகளில் இருந்து சென்னை உட்பட நான்கு மாவட்டங்களும் முழுமையாக மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்,” என்று உறுதியளித்தனர்.
கே.எஸ்.அழகிரி
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசும்போது “சென்னையைப் பொறுத்தவரை மழை வெள்ளப் பாதிப்புகளை திறமையாகவே தமிழ் நாடு அரசு கையாண்டுள்ளது என்று பாராட்டியுள்ளார்.
மேலும் அவர், “இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி உருவாகிய புயல், சென்னை மாநகரத்தின் மேல் மட்டும் 17 மணி நேரம் மையம் கொண்டு மழை பெய்தது. இந்தியாவில் உள்ள எந்த ஒரு நகரமும் இதுபோல தொடர்ந்து மழை பெய்தால் தாங்காது.
“இது மனிதப் பிழை அல்ல, இயற்கைப் பேரிடர். எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள், நியாயமானவர்கள் எங்கேயும் இருக்கின்றனர். இதில் எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நியாயமானவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் ஏற்றுக் கொள்ளக்கூடியது.
தொடர்புடைய செய்திகள்
வடிகால் சீரமைப்புக்கு ரூ.4,000 கோடியை தமிழக அரசு முறையாக செலவு செய்துள்ளனரா என்பதை மாநில தணிக்கைக் குழு முடிவு செய்யும். குறை சொல்வது எளிது. தமிழ் நாடு அரசு கேட்டுள்ள 5,000 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கிட வேண்டும்,” என்று கே.எஸ். அழகிரி கூறினார்.

