சென்னை: மிச்சாங் புயல், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை, தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி. அப்போது அவர், “வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் அரசு என்ன தடுப்பு நடவடிக்கைகள் எல்லாம் மேற்கொண்டது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.
மக்களைப் பாதுகாக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தோம். வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக அவர் கூறினார்.
“மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இப்போது செய்ய வேண்டியவை. எனவே, வருங்காலத்தில் சென்னையில் இதுபோன்ற பாதிப்புகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டமிடல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்,” என்றார் குணால்.
மேலும், நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் சென்று பார்த்ததாகக் கூறிய திரு குணால், மக்கள் ஏராளமான உடைமைகளை இழந்துள்ளதாகவும் புயல் மற்றும் கனமழையால் தரைத்தள வீடுகளில்தான் 10 முதல் 12 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது என்றார். அது துரதிர்ஷ்டமானது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பானதாக இருந்தபோதிலும், அதிகனமழை பெய்ததால்தான் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் என அனைவருடனும் இணைந்து மக்களும் பணியாற்றியுள்ளனர். இது பாராட்டுதலுக்குரியது என்றார் குணால்.
“இப்போதைக்கு எங்களால் சேதங்களின் முழு விவரங்களைக் கூற முடியாது. அனைத்துத் தகவல்களும் சேகரித்த பின்னரே எங்களது அறிக்கையை சமர்ப்பிப்போம்,” என்று கூறியுள்ளார்.