கா.சண்முகம்: தமிழகம் வளர்ந்தால் தமிழும் வளரும்

சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் தமிழ்நாடு அரசு நடத்திய அயலகத் தமிழர் தினம் 2024ன் இரண்டாம் நாளில் தலைமை விருந்தினராக உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவருக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“இவ்வாண்டு சிங்கப்பூரை சிறப்பிக்கும் வகையில் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த தமிழ்நாட்டின் முதல்வர், கலைஞரின் புதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,” என அழகு தமிழில் தன் சிறப்புரையைத் தொடங்கினார் திரு சண்முகம்.

இவ்வாண்டு முக்கியமான சிங்கப்பூர் அமைப்புகளின் தலைவர்களும் இளையர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டதில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் திரு சண்முகம் கூறினார்.

“தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் சிங்கப்பூருக்கு வந்தபோது சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உறவுகளை வலுப்படுத்த, பல முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, பண்பாடு, கலை, இலக்கியம், மற்றும் வர்த்தகத்திற்கு அச்சந்திப்பு நல்ல அடித்தளம் அமைத்தது,” என்றார் திரு சண்முகம்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இம்மாநாட்டில், உலகம் முழுதும் தமிழின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை அவர் பகிர்ந்துகொண்டார்.

திரைப்படம் வாயிலாக தமிழ் வளர்ச்சி

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில், தமிழை உலகம் முழுதும் வளர்க்க கலைஞரிடமிருந்து கற்றுக்கொண்ட படிப்பினையை முதல் கருத்தாக அமைச்சர் சண்முகம் முன்வைத்தார்.

“உலகம் முழுவதும் சக்திவாய்ந்த மொழி திரைப்படத்தின் மொழி. தமிழர்களின் பேச்சை, நடையை திரைப்படங்களால் மாற்றமுடியும். எழுத்தால், பேச்சால், அறிவால், அயரா உழைப்பால் உயர்ந்த டாக்டர் கலைஞரின் வசனங்கள் இன்றும் பலரின் மனத்தில் நிலைத்துள்ளன, பல சமூக மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன,” என்றார் அவர்.

“இன்றும் கலைஞர் நம்முடன் இருந்திருந்தால், அக்காலத்துக்கும் இக்காலத்துக்கும் தமிழ்ப் பேச்சுநடை, எழுத்துநடையில் நீங்கள் என்ன வேற்றுமை காண்கிறீர்கள் என அவரிடம் கேட்டிருப்பேன். நல்ல கதைகள், உணர்ச்சியான வசனங்கள், கருத்துமிக்க பாடல்கள் - இவை அனைத்தும் தமிழ்மொழியை நல்ல நிலைக்கு இட்டுச் செல்லும்,” என்று திரு சண்முகம் சொன்னார்.

‘பொருளியல் வளர்ச்சி இல்லையேல் தமிழ் நிலைக்காது’

இரண்டாவதாக, தமிழின் வலுவான நிலைப்பாட்டிற்கு தமிழ்நாட்டின் பொருளியல் வளர்ச்சியும் முன்னேற்றமும் முக்கியம். பொருளியல் வளர்ச்சி இல்லாவிட்டால் மொழி, கலை, பண்பாடு எல்லாம் அழிந்துவிடும் என்றார் திரு சண்முகம்.

அவ்வகையில் இன்று இந்தியா விரைவாக முன்னேறி வருவதாகவும் சிங்கப்பூர் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாகவும் அண்மைய உலக முதலீட்டாளர் மாநாட்டைச் சுட்டி பாராட்டினார் அவர்.

தமிழ் வளர்ச்சியில் அரசாங்கத்தின் பங்கு

தமிழின் வளர்ச்சியில் அரசாங்கமும் முக்கியப் பங்காற்றுகிறது என்றார் திரு சண்முகம்.

சிங்கப்பூரில் அரசு மொழியாக தமிழ் இருப்பதும் தாய்மொழி கட்டாயப் பாடமாக இருப்பதும் வளர்தமிழ் இயக்கம் தமிழ்மொழி விழாக்களை நடத்துவதும் இம்மாநாட்டில் இடம்பெறும் நூல்கள் வெளியாவதும் சிங்கப்பூரில் அனைத்து இடங்களிலும் தமிழைக் காண்பதும் சிங்கப்பூர் அரசு தமிழுக்கு வழங்கும் ஆதரவின் பிரதிபலனே என்றார் அவர்.

விருது பெற்ற சிங்கப்பூரர்கள்

திரு சண்முகத்தின் முன்னிலையில் திரு ஸ்டாலின், சிங்கப்பூர்ப் புகழ்பெற்ற பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்கு தமிழ் இலக்கியத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக ‘கணியன் பூங்குன்றனார்’ விருதை வழங்கினார்.

சிங்கப்பூரின் டாக்டர் ஜெயராம் லிங்கமநாயக்கர் மருத்துவப் பிரிவில் விருது பெற்றார்.

முதல்வர் சார்பாக, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், 2022க்கான தமிழ் இலக்கிய விருதினை கவிமாலைக் காப்பாளர் மா.அன்பழகனிடம் வழங்கினார்.

நிறைவு அங்கமாக, சிங்கப்பூரிலிருந்து வந்த கிட்டத்தட்ட 130 பேரைச் சந்தித்து உரையாடி, குறிப்பாக இளையர்களின் வினாக்களுக்கு விடையளித்தார் திரு சண்முகம்.

அமைச்சர் சண்முகம் முன்னிலையில் ‘நமது கிராமம்’ திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. அயலகத் தமிழர்கள் தம் கிராமங்களுக்கான நன்கொடைக் காசோலையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!