வெள்ளத் தடுப்பு: ஜப்பான், தமிழக அரசு ஆலோசனை

வெள்ளத் தடுப்பு: ஜப்பான், தமிழக அரசு ஆலோசனை

2 mins read
08700f78-b204-4746-abfd-6272de268543
தோக்கியோவில் செயல்பாட்டில் உள்ள சில திட்டங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: வெள்ளத் தடுப்பு திட்டம் தொடர்பாக தமிழக அரசும் ஜப்பான் அரசு அதிகாரிகளும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இதன் மூலம் சென்னையில் அவ்வப்போது ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது சென்னை மாநகராட்சி.

ஜப்பானில் அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் ஒன்றான தோக்கியோவில் செயல்படுத்தப்படும் வெள்ளத்தடுப்பு திட்டம் நல்ல பலன்களை அளித்து வருகிறது. எனவே அதுபோன்ற திட்டத்தை சென்னை மாநகரில் செயல்படுத்த மாநகராட்சி விரும்புகிறது.

இதையடுத்து தோக்கியோவில் செயல்பாட்டில் உள்ள சில திட்டங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், முதற்கட்டமாக கடந்த ஆண்டு மே மாதம் ஜப்பானில் இத்திட்டம் தொடர்பான பயிற்சிக்காக தமிழக அதிகாரிகள் சென்றனர்.

கடந்த 2015, 2023ஆம் ஆண்டுகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னை மாநகரம் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டது. மீண்டும் அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி விரும்புகிறது.

ஜப்பானில் உள்ள அனைத்துலக கூட்டுறவு முகமையின் உதவியோடு சென்னை மாநகரில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என்றும் இதுதொடர்பாக அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், நீர்வளத்துறை, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பேரிடர் அபாயத்தைக் குறைக்க ஆற்றுப் படுகைகளில் விரிவான வெள்ளத் தடுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“இதையடுத்து தமிழ்நாடு பேரிடர் கட்டுப்பாட்டு நிறுவனம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மாநில நீர்வளத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியன ஜப்பான் அனைத்துலக கூட்டுறவு முகமையுடன் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

“தமிழக உயரதிகாரிகள் ஏற்கெனவே ஜப்பான் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொண்டனர். இந்நிலையில் ஜப்பான் அதிகாரிகள் குழு ஜூன் மாதம் சென்னை வருகிறது. அப்போது வெள்ளத் தடுப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,” என்று மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்