தர்மபுரி: காவிரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரை சேமிக்கும் வகையில் தமிழகத்தின் ராசி மணல் பகுதியில் புதிய அணையை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி தண்ணீரை பெற்றுதர கோரி தர்மபுரியில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன், மேகதாது அணை கட்டுமானத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
“ராசிமணல் பகுதியில் அணைகட்டினால் கன மழை காலங்களில் காவிரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமிக்கலாம் என்றார். எனவேதான் ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
“மேகதாது அருகே மழைகாலங்களில் மழை நீரையும், இதர காலங்களில் பெங்களூரு நகரின் கழிவு நீரும் சேமிக்கப்படுகின்றன. காவிரியில் கழிவு நீர் கலப்பதால் பொது மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே, காவிரியில் கழிவு நீர் கலப்பதையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
“மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு, கர்நாடக அரசிடம் உடனடியாக பேசி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுதர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரம் மிக்க ஆணையமாக செயல்பட வேண்டும்,” எனவும் பி.ஆர்.பாண்டியன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

