கனமழை: சென்னையில் 26 விமானச் சேவைகள் பாதிப்பு

கனமழை: சென்னையில் 26 விமானச் சேவைகள் பாதிப்பு

2 mins read
e3d1a440-a936-43de-83b4-eb1c816c416f
சென்னை விமான நிலையத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டின் வட மாநிலங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இரவு வேளைகளில் கனமழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இரண்டாவது நாளாக சென்னை விமான நிலையத்தில் 26 விமானச் சேவைகள் புதன்கிழமை பாதிக்கப்பட்டன.

விமானங்கள் புறப்பட்டுச் செல்வதும் தரையிறங்குவதும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பயணிகள் பெரும் அவதிக்குள்ளானதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். .

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து 70 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும் டெல்லியில் இருந்து 158 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும் கீழே தரை இறங்கமுடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன.

பின்னர் கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும் டெல்லி விமானம் பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.

அதேபோல் மதுரை, மும்பை, கோவை, டெல்லி, ஹைதராபாத், கோவா, வாரணாசி உள்ளிட்ட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தபடி இருந்த நிலையில், மழை, சூறைக் காற்று, இடி மின்னலின் தாக்கம் குறைந்த பின்னர் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய துபாய், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூர், அபுதாபி, பேங்காக், டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 14 விமானங்கள் இடி மின்னல் சூறைக்காற்றின் வேகம் குறைந்தபின் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

குறிப்புச் சொற்கள்