தயார்நிலையில் பேரிடர் மீட்புப்படைகள்: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவு

தயார்நிலையில் பேரிடர் மீட்புப்படைகள்: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவு

1 mins read
a5e66b03-be0a-46b6-a6a9-c6ea1abf3723
சிவதாஸ் மீனா. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் பேரிடர் மீட்புப்படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

எத்தகைய மீட்பு நிவாரணப் பணிகளிலும் ஈடுபடுத்த ஏதுவாக அப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, காவல்துறையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றுள்ள அலுவலர்கள் கண்டறியப்பட்டு பேரிடர் காலங்களில் அவர்களை அப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றார்.

சென்னை காவல் பிரிவில் பேரிடர் காலங்களில் மீட்பு, நிவாரணப் பணிகளை செய்வதற்கு ஏற்கெனவே தனிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மீட்புப் படைகளை தேவையான இடங்களில் முன்கூட்டியே நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெள்ளநீர் தேங்கும் பகுதிகளில் பாதிப்புக்கு உள்ளாகும் முக்கியமான உள்கட்டமைப்புகள் கண்டறியப்பட்டு அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

“பேரிடர் வேளையில் தடையில்லா கைப்பேசி இணைப்பை ஏற்படுத்த கைப்பேசி கோபுரங்களுடனான வாகனத் தொடர்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

“மேலும், பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்து துறைகளும் பின்பற்றுவதற்கு ஏற்ப நிலையான வழிகாட்டி நடைமுறைகளைக் கொண்ட கையேடுகளைத் தயார் செய்ய வேண்டும்,” என்றும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்