அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்; சீமான் ஆதரவு

2 mins read
45bbaeee-49d1-4183-9703-cf59542d2fb9
கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கடந்த நான்கு நாள்களாக அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பதற்கு பேரவைத் தலைவர் அப்பாவு தடை விதித்தார்.

அத்துடன், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள என அந்தப் பகுதி முழுவதும் அதிமுகவினர் கறுப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தொடர்ந்து அந்தப் பகுதியில் கூட்டம் அதிகரித்து வருவதால் விரைவில் அந்தச் சாலை மூடப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். தனிநபரை தாக்கிப் பேசக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது உள்ளிட்ட 23 கட்டுப்பாடுகளை அதிமுகவுக்கு காவல்துறை விதித்துள்ளது.

அதிமுகவினரின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி 400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மெத்தனால் ரசாயனம் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை புதன்கிழமை வரை 63 ஆக அதிகரித்திருந்தது.

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் தமிழக அரசு ஒப்படைத்து உத்தரவிட்டிருந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியிடமும் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், இப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இதற்கிடையே அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“பாரதிய ஜனதா அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவுத் தெரிவித்து, ஜனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்