நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பந்தலூர் பகுதியைச் சேர்ந்த 11 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசுப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. வெள்ளிக்கிழமை இரவு வரையிலான 24 மணி நேரத்தில், 278 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் இரு தினங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்ததால் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவில் கனமழை பெய்ததாகப் பதிவாகியுள்ளது.
இங்குள்ள பந்தலூர் நகரம் மழைநீரில் மூழ்கியுள்ளது. ஆறுகள், நீர்நிலைகள் நிரம்பியதால் சாலைகள் எங்கும் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதனிடையே, பாடந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தில் குளம்போல் தேங்கி நின்ற மழைநீரில் எந்த ஆபத்துக்கும் அஞ்சாமல் மாணவர்கள் உற்சாகமாக காற்பந்து விளையாடினர்.
தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மரங்கள் விழுவதற்கும், வீடுகள் இடிவதற்கும் அதிக வாய்ப்பிருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
நீர்நிலைகளுக்குச் செல்லும் பாதைகளைத் தூர்வாராமல் இருந்ததே இத்தகைய பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காட்டு யானை
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி வழியாக கேரளாவுக்குச் செல்லும் குண்டம்புழா ஆற்றை நான்கு காட்டு யானைகள் கடக்க முயன்றபோது, ஒரு காட்டு யானையை வெள்ளம் 100 அடி தூரத்துக்கு அடித்துச் சென்றது. தண்ணீரில் மூழ்கிய யானை தும்பிக்கையை மட்டும் உயர்த்தியபடி சென்று, பின்னர் பல கட்டமாகப் போராடி ஆற்றைக் கடந்து கரையோரத்துக்கு வந்தது.
அப்போது, மற்ற காட்டு யானைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானையை எதிர்பார்த்து ஆற்றின் கரையோரம் நின்றுகொண்டிருந்தன. தொடர்ந்து அவை உயிர் பிழைத்து, கரையேறிய காட்டு யானையுடன் வனப்பகுதிக்குள் சென்றன.
காட்டு யானை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, உயிர் தப்பிய நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள் காணொளியாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.