ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நீண்டநாள்களாக குதிரைப்பந்தயம் நடைபெற்று வந்த திடலுக்கு வருவாய் துறை சீல் வைத்துள்ளது.
குதிரைப் பந்தயத்தை நடத்தும் நிர்வாகம் ரூ.822 கோடி ரூபாய் குத்தகையை செலுத்தவில்லை என்பதால் போட்டி நடத்தப்படும் திடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை பேருந்து நிலையம் அருகே நூறாண்டுகளுக்கும் மேலாக குதிரைப்பந்தயங்கள் நடைபெற்று வந்தன. இதற்காக வருவாய்த்துறை நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்தது மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம். கடந்த 1978 ஆம் ஆண்டிலேயே குத்தகைக்காலம் முடிந்துவிட்ட நிலையில், ரேஸ் கிளப் நிர்வாகம் அந்தத் திடலை தொடர்ந்து பயன்படுத்தி வந்தது.
அரசுத்தரப்பில் அறிவிப்பு அனுப்பப்பட்டும் உரிய பதில் கிடைக்காததால் கடந்த 2006 ஆம் ஆண்டு ரேஸ் கிளப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் கடந்த 2019 ஆம் ஆண்டு குதிரைப்பந்தைய திடலை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னர் உதகை கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் 52.4 ஏக்கர் குதிரைப்பந்தயத் திடலை மீட்டுள்ளனர். இந்த நடவடிக்கை காவல்துறையின் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

