காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட தமிழ்நாடு முடிவுசெய்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் சட்டத்துறை வல்லுநர்களும் பங்கேற்றனர்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை அக்கூட்டம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
“கூட்டத்தின் தீர்மானங்களில் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதேநேரத்தில், காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடக அரசுகளைக் கண்டித்து டெல்டா விவசாயிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வரும் நிலையிலும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. எனவே கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசிடம் பேசி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாத தமிழக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ‘காவிரி உரிமை மீட்புக் குழு’ இன்று காலை முற்றுகைப் போராட்டம் நடத்தியது.
தொடர்புடைய செய்திகள்
100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வேளாங்கண்ணி செல்லும் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தியது.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளை கண்டித்து மன்னார்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் ரயில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.
சிதம்பரத்தில் இடம்பெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 60 பேர் கைதுசெய்யப்பட்டனர்.