தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது

தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு

2 mins read
314707c7-1161-41c1-81b4-c36db7c525be
மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் வே.ஈஸ்வரன். - படம்: இணையம்

கோவை: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதம், இந்தி மொழிகளின் வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதை ஒப்பிட தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மிகக் குறைவு என்றும் மறுமலா்ச்சி மக்கள் இயக்கத் தலைவா் வே.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த விவரங்களை அவர் பெற்றுள்ளார்.

இந்திய மொழிகளின் வளா்ச்சிக்காக மத்திய அரசின் உயா் கல்வித் துறை செலவிடும் தொகை, ஒவ்வொரு மொழிகளுக்கும் செலவிடப்படும் தொகை போன்றவை குறித்து மத்திய கல்வி அமைச்சிடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த 2013-14 முதல் 2022 - 23ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளா்ச்சிக்காக டெல்லி மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கு ரூ.2,029 கோடி, திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2,435 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதை விட இரண்டரை மடங்கு அதிகமாகும்.

அதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காக ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்திற்கு செலவிடப்பட்டதில் 7 விழுக்காடு மட்டுமேயாகும்.

அதேபோல ஆக்ராவில் உள்ள மத்திய இந்தி கல்வி நிறுவனத்துக்கு ரூ.395 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டு வந்த தொகையைவிட 60 விழுக்காடு அதிகம்.

இந்தியா முழுவதும் பெரும்பான்மை மக்கள் பேசக்கூடிய இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளின் வளா்ச்சிக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய அக்கறையைவிட சமஸ்கிருத மொழி வளா்ச்சிக்காக கூடுதல் அக்கறையை மத்திய அரசு அளிக்கிறது.

எனவே, இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் பேசுகின்ற அனைத்து மொழிகளின் வளா்ச்சிக்கும் சமமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோல நிதி ஒதுக்குவதிலும் பாரபட்சமும் காட்டக்கூடாது என்றும் வே.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

குறிப்புச் சொற்கள்