காரைக்குடி: தமிழ்நாடுஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் போராட்டத்துக்குத் தீர்வு காணப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்நகரில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பூங்காவில் அழகப்பரின் உருவச் சிலையை புதன்கிழமை (ஜூலை 31) அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ், கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எட்டப்படும் என்று கூறினார்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 32 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நடத்திவரும் முற்றுகைப் போராட்டம் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் (ஜூலை 31) தொடர்ந்தது. மூன்றாவது நாள் நடந்த போராட்டத்திலும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சென்னை டி.பி.ஐ.யில் உள்ள பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்து கடந்த இரு நாள்களாக போராட்டம் நடத்தினர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.
புதன்கிழமை போராட்டத்தில் பங்கேற்க தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, கரூர், பெரம்பலூர், அரிய லூர், சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குழு குழுவாக டி.பி.ஐ. நோக்கி வந்தனர்.
அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
“ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பது அரசுக்கு நல்லதல்ல,” என்று நிர்வாகிகள் கூறினர்.
“தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்களுக்கு வழங்குவதாக கூறிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் பேசி தீர்வு காண வேண்டும்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.