தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாமக்கல்: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 9 நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

3 mins read
a6b91ea7-f4b9-43a0-a36b-eadcea94466d
நாமக்கல் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநருமான ஆசியா மரியம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறுகிறார். - படம்: ஊடகம்
multi-img1 of 2

நாமக்கல்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் சுமார் 1.70 லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சி காவிரி கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 900க்கு மேற்பட்டோர் 9 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநருமான ஆசியா மரியம், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்ததோடு, முகாம்களில் தங்கியுள்ளோரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் உமா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் உட்பட உயர் அதிகாரிகளும் சென்று பள்ளிப் பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாதுகாப்புக் கருதி மின்சாரச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் சூழ்ந்த பகுதியில் பொதுமக்கள், சிறார்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடங்கள் வழங்கும் வகையில் காடச்சநல்லூர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. காடச்சநல்லூர் பகுதியில் தரப்படும் மாற்று இடங்களுக்கு 380 குடும்பங்கள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நிரந்தர வீடு அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் ஆசியா மரியம்.

எதிர்க்கட்சித்தலைவர் ஆய்வு

இந்நிலையில், சனிக்கிழமை குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அதிமுக அமைச்சர்களும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு புடவை, வேட்டி, பெட்ஷீட் மற்றும் அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கிச் சென்றனர்.

50 மருத்துவ முகாம்கள்

“காவிரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ளபெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் உடனடியாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஆக.2) அன்று 37 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை 50 மருத்துவ முகாம்களாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. இந்த மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை என்பது வெள்ள நிலவரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்.

இந்த மருத்துவ முகாம்களில் சளி, காய்ச்சல், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு தேவைக்கேற்ப மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் 1,056 பேர், ஈரோடு மாவட்டத்தில் 317 பேர், கடலூர் மாவட்டத்தில் 53 பேர், கரூர் மாவட்டத்தில் 30 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 பேர், தர்மபுரி மாவட்டத்தில் 35 பேர் என மொத்தம் 1,531 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்