புதுக்கோட்டையில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் ஊழியர் பற்றாக்குறை, குறைவான வசதிகள்

2 mins read
0de48204-3aa8-4a8f-a55d-0ed4289134e7
ஆவுடையார்கோயில் தாலுகா அரசு மருத்துவமனையில் செயல்படக்கூடிய எக்ஸ்ரே இயந்திரம் இல்லை. - படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோயில் தாலுகா அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. மூன்று ஆண்டுகளாக எக்ஸ்ரே இயந்திரம் பழுதடைந்து கிடப்பதால், நோயாளிகள் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று அறந்தாங்கி நகரத்திற்கோ அல்லது பிற தனியார் மையங்களுக்கோ சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று உள்ளூர்வாசிகள் புலம்புகின்றனர்.

இந்த மருத்துவமனை, தாலுகாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்குச் சேவை செய்வதாலும் 24 மணிநேரமும் கிடைக்கக்கூடிய மருத்துவச் சேவையை உறுதி செய்ய ஐந்து கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும், இரவு நேரப் பணியை அறிமுகப்படுத்தவும் குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய கட்டடத்தைக் கட்ட ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டும் இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதால், அரசு செயல்படாமல் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ள நிலையில், அந்த பொது மருத்துவமனையின் மோசமான நிலை திங்கட்கிழமையன்று போராட்டத்தைத் தூண்டியது.

“மருத்துவமனையில் தற்போது மூன்று தாதியர், இரண்டு மருத்துவர்கள், ஒரு துப்புரவுப் பணியாளர் மட்டுமே உள்ளனர். மருத்துவமனை சிறப்பாக செயல்பட, குறைந்தபட்சம் 12 பணியாளர்கள் தேவை,” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவுடையார்கோயில் பகுதிச் செயலாளர் வி.கே.காமாட்சி கூறினார்.

மகப்பேறு படுக்கைப் பிரிவில் இரவு நேரச் சேவைகள் இல்லாததாலும் பாம்புக் கடி போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு அவசர சிகிச்சை இல்லாததாலும், அறந்தாங்கி அல்லது புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் திரு காமாட்சி சொன்னார்.

மருத்துவமனை வசதிகளை மேம்படுத்த அரசுக்கு வலியுறுத்தி, அங்கு வசிக்கும் எஸ்.பழனிக்குமார் கூறுகையில், “எக்ஸ்ரே, ஸ்கேனிங் இயந்திரம் செயல்படாததால், அறந்தாங்கிக்கு 15 கி.மீ., தூரம் பயணிப்பது பலருக்குச் சுமையாக உள்ளது,” என்றார்.

பலமுறை முயற்சித்தும் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஜின்னாவிடமிருந்து எந்தக் கருத்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட அளவிலான சுகாதார அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டபோது, ​​புதுக்கோட்டை இணை இயக்குநர் தற்போது விடுப்பில் இருப்பதால் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்