சென்னை: சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகள் தொடர்பாக மாறன் சகோதரர்கள் என்று குறிப்பிடப்படும் கலாநிதி, தயாநிதி இடையே மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன், பங்குகள் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, தனது மூத்த சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட ஏழு பேர் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மணிகன்ட்ரோல்.காம் என்ற இணையத்தளத்தில் வெளியான செய்தி திமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலாநிதி மாறன் திட்டமிட்டு, ஏமாற்று வழிகளின் மூலம் தமக்கு எதிராகச் சதி செய்தார் என்றும் தயாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சன் குழுமத்தின் பங்கு நடைமுறையை கடந்த 2008ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதை, அசல் ஆவணத்தின்படி மீண்டும் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் தயாநிதி மாறன். இது தொடர்பாகவே அவர், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மற்றும் ஆறு பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
“ஒட்டுமொத்த நிறுவனம் மற்றும் சொத்துகளை, தனிப்பட்ட ஆதாயத்துக்காக தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள, மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் கலாநிதி.
“குடும்பச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, குறிப்பாக முரசொலி மாறன் மரணப்படுக்கையில் இருந்தபோது, 2003ல் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்று தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது தந்தையின் மரணத்துக்குப் பின், உரிய சட்ட ஆவணங்கள் இன்றி, தாய் மல்லிகா மாறன் பெயருக்கு சொத்துகள் மாற்றம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் நிறுவனப் பங்குகளை கலாநிதி மாறன் பெயருக்கு மாற்றிக்கொள்ள இது உதவியாக அமைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
கலாநிதி மாறன் அடுத்தடுத்து மேற்கொண்ட சில நடவடிக்கைகளால் சன் குழுமத்தின் பெரும்பான்மை உரிமையாளராக கலாநிதி மாறன் உருவெடுத்ததாகவும் குடும்பத்தின் பங்கு 50%ல் இருந்து 20%ஆக குறைந்தது என்றும் தயாநிதி மாறன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கலாநிதி மாறன் மேற்கொண்ட நடவடிக்கைகள் நிதி மோசடியாகக் கருதப்பட வேண்டும் என்றும் மொத்தம் 3,498 கோடி ரூபாய் நிதி மோசடி நடத்திருப்பதாக கருத வேண்டியுள்ளது என்றும் தயாநிதி மாறன் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.