சென்னை: கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப அலை, இனி மாநிலப் பேரிடராகக் கருதப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழப்போரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. குறிப்பாக சென்னை, திருச்சி, வேலூர், திருவள்ளூர், மதுரை, நாகை, நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெப்ப அலை பல நாள்கள் நீடித்தது.
இதனால் பலர் பாதிக்கப்பட்டதை அடுத்து, வெப்ப அலை வீச்சு மாநிலப் பேரிடராக கருதப்படும் என ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது.