புதுடெல்லி: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவதற்குத் தேவையான நிலங்களை அடையாளம் காணுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (செம்டம்பர் 17) உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, நவோதயா பள்ளிகளைத் திறக்க அனுமதிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
அந்த வழக்கில், நவோதயா பள்ளிகளுக்கான இடத்தை அடையாளம் காணுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் 15 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு நிராகரித்தது.
விசாரணையின்போது, நவோதயா பள்ளிகளில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும், இது மாநிலக் கொள்கைக்கு எதிரானது என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
எனினும், அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்தி மொழியில் பிரச்சினை இருந்தால் மத்திய-மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றனர்.
“தமிழ்நாடு அரசு தங்களின் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மண்ணில் இந்தி கற்பிக்கப்படவேகூடாது என்ற நிலைப்பாடு இருக்கக்கூடாது. உங்கள் மாநிலத்தில் நீங்கள் செய்துவரும் நல்ல விஷயங்களுடன் கூடுதலாக ஒன்றைச் சேர்த்துக்கொள்வது உங்கள் தரத்தைக் குறைத்துவிடாது.
“மேலும், டெல்லியிலிருந்து வரும் ஒரு விஷயம் சென்னையின் தரத்தைக் குறைத்துவிடாது. சென்னை மக்கள் டெல்லியை அந்நியப்படுத்தக்கூடாது. அதேபோல், டெல்லியும் சென்னையை அந்நியப்படுத்தக்கூடாது,” என்று தெரிவித்தனர்.
முந்தைய நீதிமன்ற உத்தரவின்படி, நவோதயா பள்ளிகளுக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகளை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
