கோவை: வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்துவரும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிப்பிடித்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, ‘டாணா’ புயலின் தாக்கம் காரணமாக நீலகிரி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
கோவையில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து, அம்மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு அக்டோபர் 22ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பருவமழை தொடங்கி ஒரு மாதம்கூட முடிவடையாத நிலையில், மேட்டூர் ஆணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 100 அடியை எட்டியது என்றும் நீர் இருப்பு 65 டிஎம்சியாக உயர்ந்துள்ளது என்றும் தமிழக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நடப்பாண்டில் மேட்டூர் அணை நீர்மட்டம் இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து பாசனப் பணிகளுக்காக 7,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதற்கிடையே, வடகிழக்குப் பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளது. கோவை, திண்டுக்கல், நீலகிரியில் பெய்துவரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காரமடை அருகே ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இரண்டு கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
அதிகபட்சமாக, கோவையில் 9 சென்டிமீட்டர் மழையும் திண்டுக்கல், நீலகிரியில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் திருப்பூரில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளன.
இம்மாவட்டங்களைத் தவிர, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதன்கிழமையும் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்ததாக வானிலை மையம் கூறியுள்ளது.

