மதுரை: நடித்தாலே போதும், நாட்டை ஆளும் தகுதி உள்ளதாக மக்கள் நினைப்பது கொடுமையானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திரைக் கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் தமிழினம் விழிப்புற்று எழவேண்டும் என்றார் அவர்.
மருதுபாண்டியர்களின் 224ஆவது குருபூஜை விழாவையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழ்ச் சமூகம் எதை நோக்கிச் செல்கிறது எனத் தெரியவில்லை. கல்வி வியாபாரமாக மாறியதால் கல்வியில் அரசியல் கற்பிக்கப்படவில்லை. கலையைப் போற்றலாம், கலைஞர்களைக் கொண்டாடலாம். நடித்தாலே போதும், நாட்டை ஆளக்கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது, தகுதி வந்துவிடுகிறது என்று நாட்டு மக்கள் கருதுவார்களானால், அது மிகவும் கொடுமையான போக்காக மாறிவிடும் என்று அவர் சொன்னார்.
வருங்காலத் தலைமுறை, அறிவார்ந்த சமூகமாக உருவாகும் என நினைக்கும்பொழுது தற்போதைய நிலை கண்டு ஒரு நடுக்கம் இருக்கிறது. ஒப்பனையை அழித்த உடனேயே அரியணை? நடிக்கும்போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு? நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டைக் கொடுப்போம் ஆள்வதற்கு, என்கிற கோட்பாடு, நிலைப்பாடு உலகத்திற்கே அறிவை கடன் கொடுத்த தமிழ் சமூகம் இச்செயல்களை ஏற்கிறதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அரசியல் என்பது வாழ்வியல். முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளாவிட்டால் பெரும் சிக்கல் ஆகிவிடும் என்றார் சீமான். கல்வி அரசியலை கற்பிக்கவில்லை. ஒழுக்கம் நெறிமுறைகளைக் கற்றுத் தரும் கல்வியாக இல்லாமல், அது வணிகமாக மாறிவிட்டது என்று அவர் சொன்னார்.

