பாகிஸ்தானை விஞ்சவிருக்கும் தமிழ்நாட்டுப் பொருளியல்

2 mins read
1159d85d-a5f3-4985-a190-5c5211fa3694
2004-05 நிதியாண்டில் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 37 விழுக்காடாக இருந்த தமிழகப் பொருளியல் தற்போது அதற்குச் சமமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஒருகாலத்தில் இந்தியாவின் தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலப் பொருளியல்களைவிட முன்னிலையில் இருந்த பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த 20 ஆண்டுகளில் சுருங்கிவிட்டதாகப் புதிய தரவுகள் காட்டுகின்றன.

தற்போது தமிழகத்தின் மொத்த உற்பத்தியும் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சமமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

2004-05 நிதியாண்டில் பாகிஸ்தானியப் பொருளியலின் மதிப்பு $132 பில்லியனாக இருந்ததாக இந்தியாவின் மத்திய வங்கியும் உலக வங்கியும் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.

அப்போது தமிழகத்தின் மொத்த உற்பத்தி $48 பில்லியனாக இருந்தது. ஒப்புநோக்க, பாகிஸ்தானிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது கிட்டத்தட்ட 37 விழுக்காடு.

இந்தியாவில் தொழில்துறையில் முன்னணி வகிக்கும் மாநிலமான மகாராஷ்டிராவின் பொருளியல் $92 பில்லியன், அதாவது பாகிஸ்தானியப் பொருளியலில் ஏறக்குறைய 69 விழுக்காடாக இருந்தது.

தற்போது பாகிஸ்தானியப் பொருளியல் மகாராஷ்டிரப் பொருளியலில் 69 விழுக்காடாகவும் தமிழகப் பொருளியலுக்கு ஏறத்தாழ சமமாகவும் இருக்கிறது.

2023-24 நிதியாண்டில் பாகிஸ்தானியப் பொருளியலின் மதிப்பு $338 பில்லியன் என்றும் வெகுவாக வளர்ச்சி கண்ட தமிழகப் பொருளியலின் மதிப்பு $329 பில்லியன் என்றும் கூறப்பட்டது. மகாராஷ்டிரப் பொருளியலின் மதிப்பு $490 பில்லியனாகப் பதிவாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் தமிழகப் பொருளியல் அபார வளர்ச்சி கண்டுள்ளதை இது காட்டுகிறது.

தமிழகப் பொருளியலின் இந்த வளர்ச்சிக்கு வலுவான தொழில்துறை, வளர்ந்துவரும் சேவைத் துறை, கூடுதலான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் போன்றவை முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, வாகன உற்பத்தி, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகள் மாநிலத்தின் பொருளியலுக்கு முதுகெலும்பாக விளங்குகின்றன. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகள் இந்தப் பொருளியல் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளையில், பாகிஸ்தானில் நிலவும் அரசியல் நிலையற்றதன்மை, கடுமையான நிதிப் பற்றாக்குறை போன்றவற்றால் அந்நாடு பல்வேறு பொருளியல் சவால்களை எதிர்கொள்வதையும் அவர்கள் சுட்டினர்.

குறிப்புச் சொற்கள்