சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் மொத்தம் 7,000க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இறுதி நாள் விறுவிறுப்பு
திங்கட்கிழமை (ஏப்ரல் 6) முகூர்த்த நாள் என்பதால், ஒரே நாளில் 2,500க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (போடி), மத்திய அமைச்சர் எல். முருகன் (அவிநாசி) ஆகியோர் கடைசி நாளில் மனுத் தாக்கல் செய்தனர்.
ஏற்கெனவே முதல் நாளன்று முதல்வர் மு.க. ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், சீமான் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
மேலும், செந்தில் பாலாஜி, வானதி சீனிவாசன், பிரேமலதா விஜயகாந்த், சௌமியா அன்புமணி, தமிழிசை சௌந்தரராஜன் போன்ற முக்கியத் தலைவர்களும் களத்தில் உள்ளனர்.
மாநிலத்திலேயே அதிகபட்சமாகக் கரூர் தொகுதியில் 108 மனுக்களும் இதற்கு அடுத்தபடியாகத் தொண்டாமுத்தூரில் 77 மனுக்களும் தாக்கலாகியுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 20 மனுக்களும் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 66 மனுக்களும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கத்தில் 40 மனுக்களும் தாக்கலாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நடைபெறுகிறது.
மனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை நேரத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர் துணைப் பட்டியலைத் தயார் செய்யும் பணிகளிலும் வாக்குச்சாவடிச் சீட்டு (Booth slip) வழங்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

