கரூர்: கரூர் நெரிசலில் பலர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி ஆறு குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட விவரம் இடம்பெற்றுள்ளது.
கரூர் சம்பவத்தில் 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் இத்தகவலை அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
“விலைமதிக்க முடியாத அந்த உயிரிழப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியுள்ளது.
“ஈடுசெய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
“இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும்,” என முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.