குவாரிகளை இயக்கத் தமிழக அரசு முடிவு

குவாரிகளை இயக்கத் தமிழக அரசு முடிவு

2 mins read
5c224c79-a415-43e0-acf6-e73741f8110b
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற மணல் கொள்ளையால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய பல நூறு கோடி ரூபாய் வருவாய் தனியார்வசம் சென்றது. - கோப்புப் படம்: ஈடிவி

சென்னை: தமிழகத்தில் உள்ள குவாரிகளை இனி மாநில அரசே இயக்குவது என்று முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும்படி கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில், குவாரிகள் மூலம் அரசுக்குக் கிடைக்கக்கூடிய வருவாய் குறித்த விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான கல், மணல் குவாரிகள் உள்ளன. அவற்றில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

பாலாறு, தாமிரபரணி, காவிரி, கொசஸ்தலை, ஆரணியாறு, வெள்ளாறு உள்ளிட்ட பல ஆற்றுப்பகுதிகளில் இயங்கிவந்த மணல் குவாரிகள், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளியதால் ஆற்றுவளம் குறையும் ஆபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மணல் விற்பனையைத் தமிழக அரசே மேற்கொள்ளும் என்ற அறிவிப்பு வெளியானது.

எனினும், குவாரிகளில் மணல் அள்ளுதல், அவற்றைக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் முறைகேடுகள் குறைந்தபாடில்லை.

கடந்த 2021ல் அமைந்த திமுக ஆட்சியிலும் இதே நிலை நீடித்தது. இதனால், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற மணல் கொள்ளையால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய, பல நூறு கோடி ரூபாய் வருவாய் தனியார்வசம் சென்றது.

இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல், மணல் குவாரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஆவணங்கள், ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், குவாரிகள் மூலம் அரசுக்கு வருமானம் ஈட்டுவது தொடர்பாக அறிக்கை தயாரிக்கும்படி, நீர்வளத்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் விஜய்.

குவாரிகளை எப்படி இயக்குவது, அதற்குத் தேவையான இயந்திரங்கள், லாரிகளைக் கொள்முதல் செய்வதா வாடகைக்கு எடுப்பதா, அதற்கு எவ்வளவு செலவாகும் என்பன உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாகத் தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தவெக ஆட்சி அமைந்த பிறகு, முறைகேடாகச் செயல்பட்டு வந்த 60 குவாரிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்