சென்னை: ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு 21.84 விழுக்காடு பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஜவுளி ஏற்றுமதி 29 விழுக்காடு உயர்ந்துள்ளது.
கடந்த 2024-25ஆம் ஆண்டில் ஏற்றுமதி 7997.17 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைத் தமிழ்நாடு முந்தியுள்ளது என்று இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை திரு ஸ்டாலின் சுட்டினார்.
கடந்த 2020-2021இல் 6,193.39 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று அவர் தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் ஏற்றுமதி-இறக்குமதி விவரங்கள் குறித்து ஆண்டுவாரி வர்த்தக பகுப்பாய்வுக்கான தேசிய ஏற்றுமதி-இறக்குமதிகளைப் பதிவு செய்திடும் நிர்யாத் நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிர்யாத் நிறுவனம் 2024-25-ம் ஆண்டுக்கான ஜவுளி ஏற்றுமதிகள் குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள ஜவுளி துணிகளின் மதிப்பு யுஎஸ் 36,610 மில்லியன் டாலர் (ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி). இதில் தமிழ்நாடு மட்டும் யுஎஸ் 7,997.17 மில்லியன் டாலர் (ரூ.73 ஆயிரத்து 925 கோடி) மதிப்புடைய ஜவுளி ஏற்றுமதி செய்துள்ளது.
ஜவுளி ஏற்றுமதியில் இரண்டாம் நிலையிலுள்ள குஜராத் 2025ல் யுஎஸ் 5646.01 மில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளியையும்; மூன்றாம் இடத்திலுள்ள மகாராஷ்டிரா யுஎஸ் 3083.28 மில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளியையும் ஏற்றுமதி செய்துள்ளன.
சவாலான ஆண்டிலும் சாதனை
இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஜவுளி அமெரிக்க சந்தைக்கே ஏற்றுமதி ஆவதால் 2025 ஜவுளித்துறைக்கு மிகவும் சவாலான ஆண்டாகவே இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருள்களுக்கு 50% வரி விதித்ததால் ஜவுளி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
திருப்பூர், ஈரோடு , கரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஜவுளி உற்பத்தியாளர்கள் மிகச் சவாலான சூழலை எதிர் கொண்டிருந்தனர். இந்தச் சவால்களை எல்லாம் கடந்து அவர்கள் சாதித்துள்ளனர்.
இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் மாநிலமாகத் தொடர்ந்து தமிழ்நாடு தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

