சேலம்: அனைத்துலக இளையர் மாநாட்டில் பங்கேற்ற தமிழக மாணவர்கள் அறுவர், ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டத்தின் அனைத்துலகத் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ஆகஸ்ட் 21, 22 தேதிகளில் நடைபெற்ற இளையர் மாநாட்டில், இந்தியா, சீனா, தாய்லாந்து, மலேசியா உட்பட 62 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், இந்தியாவைப் பிரதிநிதித்து தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆறு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள், முதன்முறையாக, நீடித்த நிலைத்தன்மைமிக்க வளர்ச்சித் துறையில் தமிழ்நாட்டின் சிறந்த செயல்பாடுகள் குறித்து ஒரு நிமிட காணொளியைப் படைத்தனர். இது அனைத்துலகத் தலைவர்கள், கல்வியாளர்களிடமிருந்து சிறப்பான அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் ஆதரவுடன் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீடித்த நிலைத்தன்மைமிக்க வளர்ச்சி வளர்ச்சித் தூதர்களாக அறுவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

