தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இருமொழி கொள்கையை தமிழகம் விரும்புகிறது: கல்வி அமைச்சர்

2 mins read
b28db453-8ec1-4c31-8fd6-af351ab9f1b3
தமிழக கல்விமுறையை சீர்குலைக்க வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

சென்னை: இருமொழிக் கொள்கையையே தமிழகம் விரும்புகிறது, தமிழகத்தின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

“உடைந்ததை ஒட்ட வைக்க வேண்டாம், தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் நன்றாகச் செயல்படும் தமிழகத்தின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம். தேசியக் கல்விக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை மொழிபிரச்சினையை விமர்சிப்பது தவறாக வழி நடத்துவது என்பது மட்டுமல்ல. உண்மையான பிரச்சினை என்ன என்பதையே தள்ளி வைப்பதாகிறது.

“தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் சோதனை முயற்சியை கடந்து பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கல்விமுறை சிறப்பாக உள்ளது, தேசியக் கல்விக் கொள்கை அதை சீர்குலைக்கிறது.

“உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு பாடத்திட்டம் சிறந்த பலன்களை தருகிறது. தமிழகத்தின் கல்விமுறையானது சிறந்த தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது. மனப்பாடம் செய்வதற்கு பதிலாக கருத்து அடிப்படையிலான கற்றலில் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது.

“தமிழகத்தில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர். 1635 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழி படிக்கின்றனர்.

“இதன்மூலம் தமிழக மக்கள் என்ன விரும்புகின்றனர் என்பது தெளிவாகிறது. சிலர் கூறுவது போன்று, 3வது மொழியைக் கற்க வேண்டும் என்ற உண்மையான தேவை இருந்திருந்தால் நம் மக்கள் ஏன் மாநில வாரிய பள்ளிகளைத் தொடர்ந்து தேர்வு செய்கின்றனர். மக்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு நடப்போம். இருமொழிக் கொள்கையையே தமிழகம் விரும்புகிறது,” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

“ஆங்கிலம் ஏற்கெனவேதமிழகத்தின் இருமொழி அமைப்பின் ஒரு பகுதி, மாணவர்கள் தங்கள் கலாசார அடையாளத்தைப் பேணுகையில் உலகளாவிய வாய்ப்புகள் இருப்பதை இங்குள்ள கல்விமுறை உறுதி செய்கிறது..

“தமிழ் என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல ,அது நமது வேர்கள், வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு இணைப்பு. எனவே, தமிழகத்தில் எவ்வித மொழியையும் வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டாம்,” என்றும் தமது பதிவில் அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்