சென்னை: ஆமாம், நாங்கள் விஷக்காளான்தான் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
“அரசுத் திட்டங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித்தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி கேட்டிருந்தார். அதற்கான பதிலை திருமண நிகழ்ச்சி ஒன்றில் நான் கூறியிருந்தேன். அதிலும் சமாதானம் அடையாத எதிர்க்கட்சித் தலைவர், ஏதேதோ கேள்விகளை மீண்டும் அடுக்கியுள்ளார்.
குறிப்பாக, மக்கள் பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்கிறார். 94 வயது வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்த கலைஞர் அவர்களின் பெயரை அரசுத் திட்டங்களுக்குச் சூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது.
அடுத்தது அப்பா, மகனைப் பாராட்டுகிறார்; மகன், அப்பாவை புகழ்கிறார் என்று எதிர்க்கட்சித்தலைவர் வேதனைப்பட்டுள்ளார். அமைச்சர்கள் நாங்கள் மட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் இன்றைக்கு உலகமே புகழ்கிறது. போற்றுகிறது. நம் முதலமைச்சர் அவர்கள் என்னை மட்டுமல்ல, எந்தத் துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அந்தத்துறையின் அமைச்சரின் செயல்பாட்டினை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்கள். ‘தன்னை புகழ யாருமே இல்லையே’ என்ற விரக்தியும் ‘தான் பாராட்ட அ.தி.மு.க.வில் ஆளேதும் இல்லையே’ என்ற ஏமாற்றமுமே எதிர்க்கட்சித்தலைவர் அவர்களின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.
‘நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான்’ என்று என்னை விமர்சனம் செய்திருக்கிறார். ஊர்ந்து போய் பதவி பிடித்த சில கரப்பான்பூச்சிகளுக்கும் விஷ ஜந்துகளுக்கும் என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள்தான். சமூக நீதிக்கொள்கையால் பண்படுத்தப்பட்டு, திராவிட இயக்கத் தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பயிர்கள் நாங்கள். எங்களைப் பார்த்தால் ஆரியத்தின் அடிவருடிகளுக்கும் அகற்றி வீசப்பட்ட களைகளுக்கும் ஆத்திரம் வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை,” என்று உதயநிதி தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

