சென்னை: திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) அறிவித்துள்ளது.
பத்து கோரிக்கைகளைத் தாங்கள் முன்வைத்த நிலையில், தங்களுடைய எந்தக் கோரிக்கையையும் திமுக அரசு பரிசீலிக்கவில்லை என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் குறிப்பிட்டார்.
திமுகவிடம் இரண்டு தொகுதிகளை ஒதுக்குமாறு தவாக வலியுறுத்தியதாகவும் அதுவும் ஏற்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சிதான் நடந்து வருகிறது. அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியை திமுக புறக்கணித்திருக்கிறது.
“திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அதிகாரிகள் அறிவுரை கூறி உள்ளனர். சினிமா நடிகர் சொன்னதற்காக அவரது தந்தையின் பெயரை தெருவுக்கு வைக்கின்றனர்,” என்று திரு வேல்முருகன் குற்றஞ்சாட்டினார்.
அடுத்தகட்டமாக ஆதரவு இயக்கங்களுடன் கலந்தாலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், தங்களுடைய பத்து கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
திமுகவின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவானது பெரியண்ணன் மனப்பான்மையுடன் தங்களை அணுகியதாகவும் இத்தகைய போக்கை ஏற்க முடியாது என்றும் திரு வேல்முருகன் கூறினார்.
தொகுதிகளுக்காக கூட்டணியிலிருந்து விலகவில்லை என்று குறிப்பிட்ட அவர், தவாக முன்வைத்துள்ள பத்து கோரிக்கைகள்தான் தங்களுக்கு முக்கியம் என்றார்.


