சென்னை: ‘டாஸ்மாக்’ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் சில்லறை விற்பனைக் கடைகள்மூலம் கிடைக்கும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூலை வரை) மதுபான விற்பனை மூலம் அரசுக்கு ரூ.17,854.63 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை மூலம் ரூ.4,065.75 கோடியும் மதிப்புக்கூட்டு வரி (வாட்) மூலம் ரூ.13,788.89 கோடியும் கிடைத்துள்ளது.
மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூழலில், டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் புதிய சாதனையைப் படைத்து வருகிறது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், “தமிழகத்தில் தற்போதைய சூழலில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை,” என்று அமைச்சர் விக்னேஷ் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, 700க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்த தவெக அரசுக்கு டாஸ்மாக் மூலம் எப்படி அதிக வருவாய் கிடைத்தது என்று திமுக உறுப்பினர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், கடந்த திமுக ஆட்சியில் 500க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவித்தபோது, அதுகுறித்து ஆய்வு செய்துவந்தால் இதுபோன்ற கேள்வி இப்போது எழுவதற்கு வாய்ப்பில்லை என்றார்.


