திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் ஒலிபெருக்கியில் தவெக கட்சிப் பாடலை ஒலிக்கச் செய்து அதை இணையத்தில் காணொளியாக வெளியிட்ட இளையருக்கு காவல்துறை வலை வீசியுள்ளது.
பழனி மலைக் கோவிலில் உள்ள கிரிவலப் பாதை உள்ளிட்ட மூன்று பாதைகளில் கோவில் நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே, அந்தப் பக்தர்களுக்கு உதவும் விதமாக, ஒலிபெருக்கிகள் மூலம் முக்கியமான தகவல்கள் ஒலிபரப்பப்படுகின்றன.
கோவிலில் நடைபெறும் பூசைகள் குறித்த தகவல்கள், காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள், பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப் படுகின்றன.
இந்நிலையில், தவெக தொண்டர் ஒருவர், கோவில் ஒலிபெருக்கி முன் நின்று, தவெக கட்சிப் பாடலை கைப்பேசி மூலம் ஒலிக்கச் செய்துள்ளார். மேலும், இச்செயலை காணொளியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

