சென்னை: தலைமை ஆசிரியர் பொறுப்பைக் கைவிட்டு, இடைநிலை ஆசிரியராகப் பதவி இறங்கி, தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் கனகலட்சுமிக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் விருது வழங்கிக் கெளரவிக்கவுள்ளது.
முனைவர் கனகலட்சுமி கோவில்பட்டியைச் சேர்ந்தவர். இவர் தமிழ்மொழியில் முதுநிலைப் பட்டம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் இளநிலைப் பட்டம், கரந்தை தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டம் உள்ளிட்டவற்றைப் பெற்றவர்.
‘தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டத்தைப் பெற்றவர் இவர். 40 நாள்களில் தமிழ் கற்க உதவும் வகையில் நூல்களையும், யூ டியூப் காணொளிகளையும் உருவாக்கியதன் மூலம் கவனத்துக்குரியவராக இருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில், பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தன் தமிழ் ஆர்வத்தால் சென்னை ஷெனாய் நகர் மாநகராட்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பதவி இறக்கம் பெற்று பணியில் சேர்ந்தார்.
கடந்த 23 ஆண்டுகளாகத் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத மாணவர்களைத் தேர்வு செய்து எளிய முறையில் கற்பித்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒலக்கூர் கிராமத்தில் ஆறு பள்ளிகளில் இருந்த 100 மாணவர்களைத் தேர்வு செய்து 40 நாள்களில் அவர்களுக்குத் தமிழ் எழுதப் படிக்கக் கற்றுத் தந்தார்.
பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் படிக்கத் தெரியாத 156,710 மாணவர்களை வாசிக்க வைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றார். கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் 36 சிறாருக்குத் தமிழ் வாசிப்புப் பயிற்சி அளித்ததுடன் 2,000 ஆசிரியர்களுக்கு எளிய முறையில் தமிழ் வாசிப்பைக் கற்பிப்பதற்கான பயிற்சிகளை அளித்தார்.
இவரின் தமிழ்ப் பணிகளை சமூக வலைதளங்கள் வாயிலாக கண்காணித்த பிரிட்டனின் கிரோய்டான் தமிழ்ச் சங்கம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கனகலட்சுமியைக் கெளரவிக்கவிருக்கிறது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்க இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. “தமிழ் கற்பிப்பதற்கும் கற்பதற்கும் மிகவும் எளிது” என்பதை மெய்பித்துள்ள முனைவர் கனகலட்சுமி, “தமிழில் எழுத்துகளைச் சரியாக உச்சரிக்காமல் விட்டுவிட்டு வரிவடிவங்களை மட்டும் நினைவில் இருத்திக் கொண்டு அதன் வழியே தமிழ் படித்து வருகிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“எழுத்தை வைத்து எழுத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்னும் முறையை நாம் அறியாமல் விட்டுவிட்டோம். தொல்காப்பியரின் விதியான எழுத்து, சொல், பொருள் என்னும் அடிப்படையில் கற்றல் – கற்பித்தல் அமையவில்லை,” என்றார். பத்து ஆண்டுகளாக பிழையோடு எழுதி வந்தாலும் ஒரே மணி நேரத்தில் பிழையில்லாமல் எழுதச் செய்து விடலாம் என்பதே தமிழ்மொழியின் சிறப்பாகும் என்று இவர் கூறியுள்ளார்.