காரைக்குடியில் ரூ.100 கோடி மதிப்பு கோயில் நிலம் அபகரிப்பு

காரைக்குடியில் ரூ.100 கோடி மதிப்பு கோயில் நிலம் அபகரிப்பு

1 mins read
3dd5ed83-eb59-49df-a257-9f0162f03ed5
கோவிலின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்திற்கு தகவல் தெரியவந்ததையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது - படம்: தினமலர்
Google News Preferred Icon

சிவகங்கை: பழனியைத் தொடர்ந்து காரைக்குடி கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலமும் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த முறைகேட்டில் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவில். இக்கோவிலுக்கு காரைக்குடி நகர்ப் பகுதியில் பல ஏக்கர் நிலம் உள்ளது.

இந்நிலையில், ரூ.100 கோடி மதிப்புள்ள இரண்டு ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை கோவில் அறங்காவலராக இருந்த ஒருவர் வேறு தனி நபருக்கு எழுதிக் கொடுத்ததுபோல் போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. பின்னர் அந்த தனிநபர் தன் மனைவி பெயரில் அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார்.

மற்ற நடவடிக்கைகளையும் பின்பற்றி தடையில்லாச் சான்று பெற்ற அந்த தனிநபர், கோவில் நிலத்தை இரண்டு மண் அள்ளும் எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கிய போதுதான் பல தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கின.

இதுகுறித்து கோவிலின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்திற்குத் தகவல் தெரியவந்ததையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகளும் காவல்துறையினரும் விரைந்து சென்று சுத்தம் செய்யும் பணிகளை நிறுத்தினர்.

மேலும், அங்கிருந்த இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கெனவே பழனி கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் தனி நபருக்குப் பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்த நிலையில், காரைக்குடி கோவில் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்