தென்கொரியாவில் ‘ரோபோ’ மோதி தஞ்சை இளையர் உயிரிழப்பு

தென்கொரியாவில் ‘ரோபோ’ மோதி தஞ்சை இளையர் உயிரிழப்பு

படம்: ஏபிபி

21 Sep 2026 - 8:22 pm

1 mins read

தஞ்சை: தென்கொரியாவில் கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட இயந்திர விபத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளையர் உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள கண்ணுகுடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுதர்சன் (33 வயது). அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தென்கொரியாவின் சியோரா நகரில் உள்ள பிரபல கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் தொழிற்சாலையிலிருந்த இயந்திர மனிதன் சுதர்சனின் மார்புப் பகுதியில் பலமாக மோதியதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடந்த வாரம்தான் சுதர்சனுக்குத் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்திருந்தது. விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், இந்தத் திடீர் விபத்து அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்கொரியத் தமிழ்ச் சங்கத்தின் உதவியுடன் சுதர்சனின் உடலைச் சொந்த ஊரான ஒரத்தநாட்டிற்குக் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்