சென்னை: தமிழகத்துக்கு துரோகம் செய்துவிடக்கூடாது என முடிவெடுத்து திமுகவில் இணைய பலர் முடிவெடுத்திருப்பதை வரவேற்பதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட செயலாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக நேற்று முளைத்த காளான் அல்ல என்றார். ஆனால், சிலர் அரசியல் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வர துடிப்பதாகக் குறிப்பிட்டு நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.
யார், எந்தக் கட்சி என்பதையெல்லாம் தாம் குறிப்பிட விரும்பவில்லை என்றார் அவர்.
கடந்த 1949ல் தொடங்கப்பட்ட திமுக 1957ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் கடுமையாகப் போராடியதாக அவர் குறிப்பிட்டார்.
“திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்குக் கோபம் வருகிறது. திராவிடத்துக்கு எதிராகவும் மதத்தை வைத்தும் ஆளுநர் பேசுகிறாரே என்றெல்லாம் வருத்தப்படலாம். ஆனால், அவர் பேச பேசத்தான் நமக்கான ஆதரவு அதிகரிக்கிறது. எனவே, ஆளுநரை மாற்ற வேண்டாம் என பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் வேண்டுகோள் வைக்கிறோம்,” என்று தமிழக ஆளுநரின் செயல்பாடுகளையும் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் திமுக ஆட்சியின் பலனை மக்கள் அனுபவித்து வருதாகக் குறிப்பிட்ட அவர், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும்கூட தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
“இத்தகைய நமது சாதனைகளை தமிழக மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். அதைத் தேர்தல் சமயத்தில் நினைவுபடுத்தினாலே 234 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுவிடும்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தொடர்புடைய செய்திகள்
துணை முதல்வர் உதயநிதி பேசும்போது, “தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிரணியினர் திரளுவார்கள். ஆனால், எதிர்க்கட்சியில் இருப்போர் ஆளுங்கட்சியில் இணைவதன் மூலமாகவே தேர்தல் முடிவுகளை இப்போதே அறிய முடிகிறது,” என்றார்.