தோக்கியோ: திருக்குறள் குறித்த ஜப்பானிய ஆவணப்படம் சனிக்கிழமை (ஜனவரி 31) ஜப்பானில் திரையிடப்படுகிறது.
அங்குள்ள யோகோஹாமா மிதோரி அரங்கில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளி ஒன்று பலனடைய உள்ளது.
‘திருக்குறள்’ பற்றிய ஆவணப்படம் ஒன்று ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் உருவாகி உள்ளது.
திருக்குறள் பற்றி பல நூல்களை எழுதியுள்ள டாக்டர் ஆர். பிரபாகரன், இதன் ஆங்கில வடிவத்தை நவம்பர் 16ஆம் தேதி அமெரிக்காவின் வர்ஜீனியாவில் திரையிட்டார்.
திருக்குறளின் மேன்மையைப் பிற நாட்டவர்களுடன் இன்றைய இளம் தலைமுறை தமிழர்களும் அறிந்துகொள்ளும் வகையில் படம் உருவாகியுள்ளது. வள்ளுவர் பேணிய மனித சமத்துவம் படத்தின் கருப்பொருளாகும்.
ஜப்பானில் திரையிடப்படும் நிகழ்வில், இந்த ஆவணப் படத்திற்கு ஜப்பானிய மொழியில் குரல்கொடுத்த திரு இடியூக்கி புஜிசாவா சிற்றுரை ஆற்றுகிறார்.
விழா ஏற்பாட்டாளர் திரு கமலக்கண்ணன், ஆவணப்பட முயற்சி குறித்து அறிமுக உரையாற்றி படத்தை வெளியிடுகிறார்.
பொங்கல் விழாவில் ஜப்பானிய யென் 3,500 கட்டணம் (ரூ.2,000) செலுத்தி 520 பேர் கலந்துகொள்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கட்டணத்தொகை முழுவதும் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றின் மேம்பாட்டிற்காக வழங்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.
விழாச் செலவுகளை விளம்பர ஆதரவாளர்கள் ஏற்கின்றனர். ‘திருக்குறள்’ ஆவணப்படத்தை தமிழ் அறிஞர் பிரபாகரன் தயாரித்துள்ளார்.

