சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சென்னை மாநகரின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் களம் இதுவரை இல்லாத அளவிற்குப் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
18 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், முக்கியக் கட்சிகளுக்கிடையே பலப்பரிட்சை நிலவுகிறது.
திமுக: சாதனைகளைக் கூறி வாக்கு வேட்டை
தற்போதைய எம்எல்ஏ எழிலன் நாகநாதன், திமுக சார்பில் மீண்டும் களம் காண்கிறார். இவருக்கு ஆதரவாகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழரசு ஆகியோர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் திட்டங்களையும் தொகுதியில் செய்துள்ள பணிகளையும் பட்டியலிட்டு, “உரிமைகளை மீட்டெடுக்க உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்,” என வீடுவீடாகச் சென்று எழிலன் வாக்கு சேகரித்து வருகிறார்.
அதிமுக: அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை
அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி, கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து அதிரடி பிரசாரம் செய்து வருகிறார்.
சுத்தமான குடிநீர், பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளைச் சீரமைத்தல், தகுதியானவர்களுக்கு வீட்டுப் பட்டா வழங்குதல், வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம் உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்து அவர் ஆதரவு திரட்டுகிறார்.
நாதக: கல்வி, மருத்துவத்தில் புரட்சி
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்.
“அரசுப் பள்ளிகளை அனைத்துலகத் தரத்துக்கு ஈடாக ‘ஸ்மார்ட்’ பள்ளிகளாக மாற்றுவது, நடமாடும் மருத்துவமனைகள், இளைஞர்களுக்கு உள்ளூர் அளவிலேயே வேலைவாய்ப்பை உறுதிசெய்வது போன்ற திட்டங்களை அவர் முன்வைக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
தவெக: தன்னிறைவு பெற்ற தொகுதி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் ஜே.சி.டி.பிரபாகர், ஆயிரம் விளக்குத் தொகுதியைத் தமிழகத்திலேயே மிகச்சிறந்த ‘தன்னிறைவு பெற்ற தொகுதி’ஆக மாற்றுவேன் என உறுதி அளித்துள்ளார்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் மேற்கொண்டுவரும் இந்தத் தீவிர வாக்குச் சேகரிப்பால், ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் காய்ச்சல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

