தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீரில் மூழ்கிய பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்; கவலையில் மூழ்கிய விவசாயிகள்

2 mins read
938624f6-e7f9-43e8-8c89-6f5de168d5eb
விவசாயிகள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். - படம்: ஊடகம்

தஞ்சை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டிசம்பர் 14ஆம் தேதி இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

குறிப்பாக தஞ்சாவூர், கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கடும் சேதங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனக் கவலை அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 11ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஓடைகள், வாய்க்கால்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. மேலும் மருதை ஆறு, தொழுதூர் அணைக்கட்டில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி, வேப்பூர் பகுதிகளில் உள்ள தாழ்வான குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதேபோல் விருத்தாசலம் மாவட்டத்தில் உள்ள ஆலிச்சகுடி, இளமங்கலம், சாத்துக்கூடல், தீவலூர், உச்சிமேடு உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஞ்சாவூர் அருகேயுள்ள ஆர்சுத்திப்பட்டு, அரசப்பட்டு, அருமலைக்கோட்டை, நார்த்தேவன் குடிக்காடு, வடக்கு நத்தம் உள்ளிட்ட சிற்றூர்களில் ஏறக்குறைய 2,000 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் நான்கு நாள்களுக்கு மேலாக தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் அந்தப் பயிர்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளதாகக் கவலை அடைந்துள்ள விவசாயிகள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏக்கருக்கு ரூ.35,000 வரை விவசாயிகள் செலவிட்ட நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள் அறுவடை செய்வதற்குத் தயாராக இருந்தனர் விவசாயிகள்.

இந்நிலையில், தொடர்ந்து பெய்த கனமழை விவசாயிகளின் திட்டத்தை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது.

குறிப்புச் சொற்கள்