விஜய்க்கு மிரட்டல்: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ கைது

விஜய்க்கு மிரட்டல்: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ கைது

2 mins read
eebc656c-c525-431c-93d6-d6d0230a2990
எலும்பை உடைத்துவிடுவோம் என்று மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் தொனியில் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியதாகத் தெரிகிறது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழக முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக எழுந்துள்ள புகாரின் பேரில், விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சனிக்கிழமை (ஜூலை 18) இரவு திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்.

“சட்டமன்றம் அடுத்து கூடும்போது உன் உடலில் (முதல்வர்) எலும்பு இருக்காது. அதை உடைத்துவிடுவோம்,” என்று மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாகத் தெரிகிறது.

இதுகுறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

திமுக எம்எல்ஏவின் இந்தப் பேச்சுக்கு பலத்த கண்டனம் எழுந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் நிர்வாகிகள் தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் திங்கட்கிழமை (ஜூலை 20) அதிகாலை கைது செய்யப்பட்டார். விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், அங்கு அவரைக் கைது செய்தனர்.

இதை அறிந்த எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும், காவல்துறை வாகனத்தை மறித்துப் போராட்டத்திலும் ஈடுபட்டதையடுத்து காவலர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர்.

எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது கொலை மிரட்டல், அவதூறுப் பேச்சு, தவறான தகவல்களைப் பரப்புதல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவாகியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதனிடையே. தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தவெக அரசு தொடர்ந்து வேட்டையாடி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுகவினர் தோல்விகண்ட விரக்தியால் அநாகரிகமாகச் செயல்பட்டு வருகின்றனர் என்று தமிழக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கூறியுள்ளார்.

முதல்வருக்கு மிரட்டல் விடுத்த எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது சட்டமன்றத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எல்லாருக்கும் எலும்புகள் உண்டு என்பதை நினைவுபடுத்த வேண்டும் என்றும் வன்னியரசு குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலையில் திமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருப்பது அராஜகமான நடவடிக்கை எனக் கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்